Friday, November 13, 2009

கவிதைகள்


நான்
அரங்கேற்றிய கவிதைகளை விட
எழுதிய கவிதைகள் அதிகம்...
நான்
எழுதிய கவிதைகளை விட
சிந்தித்த கவிதைகள் அதிகம்...
நான்
சிந்தித்த கவிதைகளை விட
வாசித்த கவிதைகள் அதிகம்...
நான்
வாசித்த கவிதைகளை விட
நீ பேசும் கவிதைகளே அதிகமடி...

கனவு



உன் கனவில் தினம்
நான் வருகிறேனா
என்றால்
நான் இல்லை என்கிறேன்...
கோபித்து கொள்கிறாய்...
ஏனடி
உன்னை நினைக்கையில்
தூக்கமே வருவதில்லை
பின் எங்கிருந்து 
நான் உன்னை கனவில் காண்பது?

சத்தம்



எப்படி நீ பேசும்போது மட்டும்
வேறு எந்த சத்தமும் கேட்பதில்லை என்கிறாய்...
எப்படி கேட்கும்?
உனக்குள் இருந்து நான் பேச
எனக்குள் இருந்து நீ கேட்கிறாயே
என்றதும் சிரித்துவிட்டு
சில சமயம் சத்தம் வருதே
எனக்கேட்கிறாய்...
அடிப்பாவி
என் இதயம் துடிப்பது
உனக்கு பொறுக்கவில்லையா?

Thursday, November 12, 2009

பயணங்கள்...

இலக்குகளை நோக்கிய
பயணங்கள்...
கண்ணில் தெரிகிற கானல் நீர்...
காதில் கேட்கிற கடும் இரைச்சல்...
எதிரில் வருகிற வாகனங்கள்...
எளிதில் கடந்திடும் மரநிழல்கள்...
கலவர நிறுத்தங்கள்...
அழுகின்ற குழந்தைகள்...
விழி வழி நுழைந்து
இதயம் சுடுகிற நிகழ்வுகள்...
செவி வழி நுழைந்து
எண்ணம் சிதைக்கிற வார்த்தைகள்...
எல்லாம் இருந்தும்
பயணங்கள் இனிக்கிறது எனக்கு....
என் வாழ்வின் இனிய தருணங்களை
எண்ணிப்பார்த்திட முடிவது இங்கேதான் என்பதால்....

Saturday, August 22, 2009

அமைதி


மழைச்சாரல்...
பறவையின் சண்டை...
குழந்தையின் சிரிப்பு...
சங்கீதம்...
யாவும் வெறும் ஒலிகளாய்...
உண்மையில்
வெறும் சப்தங்களாய்...
அமைதியற்ற வாழ்வின்
ஆபத்துகள்...
கருவறையிலும்
கல்லறையிலும்
மட்டுமே இன்னும் மீதம்...
எத்தனையோ முறை
அமைதியாய் எழுத முயன்றும்
அமைதிக்காகவே எழுத முடிகிறது...
என்னை நானே நொந்து கொள்கிறேன்
வேறென்ன நான் செய்ய...

Monday, June 1, 2009

நட்புச்சமாதி


இரு விழிகளில்
ஈரம்...
நட்பா?
பிரிவா?
எதனால்?
எங்கேயும்
பிரச்சனைகளுக்கு முடிவில்லை...
முடிவுதான் பிரச்சனை...
நீ...
பிரச்சனைகளால்
முடிவை நாடினாய்...
எத்தனை நினைவுகள் நம்மிடையே...
நட்புச்சமாதியுடன் நீயும்
நினைவுச்சமாதானங்களுடன் நானும்
எதிர் எதிர் திசைகளில்...
உயிர் பிரிவதை உணர்த்தி...
என்றாவது இணைவோம் என்று நானும்
என்றோதானே என்று நீயும்...

Wednesday, May 20, 2009

வெற்றி நிலையென நிலைத்து விட்டால்???


எண்ணங்களும்
எழுத்துகளும்
மோதும் மோதலே
கவிதை...
தொடக்கங்களும்
தோல்விகளும்
கொள்ளும் நட்பே
வாழ்க்கை...
வெற்றி உன்னிடம்
வெறும் ஆட்களை சேர்க்கும்...
தோல்வி உன்னிடம்
நல்ல நண்பர்களை சேர்க்கும்...
வெற்றி
உலகுக்கு உன்னை காட்டும்...
தோல்வி
உன்னையே உனக்கு காட்டும்...
வெற்றி நிலையென நிலைத்து விட்டால்???

Tuesday, May 19, 2009

மாற்றம்


பறவையாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் சுதந்திரத்தை
பாராட்டுவதற்காக....
தேனீயாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் சுறுசுறுப்பை
பாராட்டுவதற்காக....
எறும்பாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் ஒற்றுமையை
பாராட்டுவதற்காக....
நாயாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் நன்றியை
பாராட்டுவதற்காக....
முடிந்தால் மனிதனாக மாறுவோம்
மற்றவர்களை பாராட்டுவதற்காக....

ஜன்னல் வழி


மழைச்சாரல் மண்ணை அடைய
குளிர் தென்றல் என்னை தழுவ
இறையை நம்பா எறும்புகள்
இரையை தூக்கி செல்ல
ஜன்னல் வழி ரசித்திருந்தேன்
additional sheet
யாருக்கு வேண்டும் எனும் வரையில்